Tuesday, June 30, 2009

தண்டனை ((உரையாடல் சிறுகதை போட்டி)


இந்த பத்து நாட்களும் எவ்வளவு கோலாகலம். மனிஷா சிரித்துக்கொண்டே இருக்கிறாள். நகரின் முக்கிய பணக்காரர்களில் அவள் அப்பாவும் ஒருவர். வைர வியாபாரி. அவள் பெரிய அழகி இல்லை என்றாலும், பணமும், அழகு சாதனங்களும், அதை விட முக்கியமாக நல்ல குணங்களும், புன்னகையும் அவளுக்கு எப்போதும் ஒரு பொலிவு கொடுத்தது. நாளையுடன் இந்தக் கோலாகலம் முடிந்துவிடும். வரவேற்பு அட்டையே ஏழு பக்கங்கள்; தங்க எழுத்துக்களில். அழைப்பிதழ்களுடன் ஒரு இனிப்புப் பெட்டியும் அனுப்பப்பட்டது. நிகழ்ச்சி நிரல்களில் ஆடலும் பாடலும் நிகழ்த்தும் பல கலைஞர்கள்.


இந்த எல்லா நிகழ்ச்சிகளுமே அவள் பாட்டனார் கட்டியிருந்த கல்யாண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தன. மண்டபத்தின் முதல் தளத்தில் இருந்த பெரிய கூடத்தில், மணப்பெண்கள் அமரும் அழகிய, வெள்ளி சிம்மாசனத்தில் மனிஷா அமருகிறாள். ஏராளமான பெண்கள், முகத்தில் கணிசமான பவுடர் சுவட்டுடன், அவளருகில் வந்து அன்பின் சின்னமாகப் பரிசுகளை அளித்துவிட்டுச் செல்கிறார்கள். சிலர் அவளை உச்சி முகர்கிறார்கள். மற்றவர்கள் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறார்கள். பல்வேறு நகைகளுடன் - அவள் சிரத்தில் மிக அழகாக மின்னும் ஒரு பெரிய வைரம் ஜொலிக்கிறது - எப்போதும் பூக்கும் புன்னகையுடன் மனிஷா சொல்கிறாள் "என் பெற்றோர்களுக்கு என்னை ராணி போல அலங்கரிக்க ஆசை".


யாரும் கவனிக்காத மூலையில் அமர்ந்திருக்கும் அவள் சித்தி கண்ணீருடன் தோற்றுக்கொண்டே "இன்னும் சில தினங்களில் அவள் எங்களிடமிருந்து சென்று விடுவாள். நாங்கள் சொந்தம் கொண்டாட முடியாது" என்கிறாள். மனிஷா இரண்டு வருடங்கள் முன்பு பட்டப்படிப்பை முடித்திருந்தாள். எல்லா பதின்ம வயதினர் போலவே அவளும் விருந்துகள், கொண்டாட்டங்கள், திரைப்படங்கள், விளையாட்டு என்று தவறு காண முடியாத உற்சாகக் குமிழாக இருந்தாள். இரண்டு வருடங்கள் முன்பு ஆகஸ்ட் மாதம் ஒரு மழை நாளில் கல்லூரியில் இருந்து திரும்பும் போது இருட்டி விட்டது. மனிஷாவின் பெற்றோர்கள் ஒரு அவசர நெருக்கடியால் மதியம் வெளியூர் சென்று விட்டனர். பக்கத்துக்கு வீட்டினர் இவர்களுக்குத் தூரத்து சொந்தம். அங்கு சாவி வாங்கிக் கொள்வதற்காகச் சென்றாள்.


அதற்குப் பின் அவள் மிக அமைதியாகி விட்டாள். நீண்ட தூரம் நடக்கத் துவங்கினாள். விரதங்கள், நோன்புகள் என்று பசியை வெல்ல, எதிர்கொள்ளப் பயின்றாள். திருமணப் பேச்சு வந்த போது, தவிர்த்து, மேலே படிக்க வேண்டும் என்றாள். தந்தையின் செல்லப் பெண். அனுமதி கிடைத்து, அஞ்சல் வழியில் படிப்பு தொடர்ந்தது. மிக அமைதியாகவும், ஆழமான சிந்தனைகளுடனும் அதே சிரித்த முகத்துடனும் வளைய வந்தவளை அவள் பெற்றோர்கள் அவ்வளவு நுட்பமாகக் கவனிக்கவில்லை.


அவளுக்கு இரு மூத்த சகோதரிகள். திருமணம் ஆகியிருந்தது. அவர்களும் அவளை மணம் செய்துகொள்ள நச்சரிக்கத் துவங்கினர். "நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? கல்யாணம் செய்துகொண்டு என்ன சாதித்தீர்கள்" என்று கேட்டவளுக்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை. மறுநாள் காலை. மனிஷாவின் குரு வந்திருக்கிறார். அவரும் இவளும் நிறைய நேரம் பேசுகிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும். ஆயுள் காப்பீடு, வரிச் சலுகைகள் முதல் மிக்கேல் ஜாக்சன், குழந்தைகள் என்று பலவும். ஊர்வலம் தயாராக நிற்கிறது. ஆயிரம் பேருக்கு மேல். இந்த மண்டபத்திலிருந்து, கோயிலை ஒட்டியிருக்கும் பொது மைதானத்திற்குச் செல்லப் போகும் ஊர்வலம்.


அங்கு சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகிறது. சிகப்புப் பட்டாடையில் அமர்ந்திருக்கும் மனிஷா தன நீண்ட கூந்தலைச் சரிசெய்து கொள்கிறாள். நெற்றிப் பொட்டைச் சரி பார்த்துக் கொள்கிறாள். சற்று நேரத்திற்குப் பிறகு அவள் குளித்து, புதிய ஆடையில் வந்து அமர்கிறாள். சில நிமிடங்கள் முன்பு அவள் சிரத்தில் இருந்த முடிக்கற்றைகள் முற்றிலும் மழியப்பட்டன. வெள்ளை உடையில் சாந்தமாக வந்து அமர்கிறாள். இப்போது அவள் பாட்டியிலிருந்து முகச்சுருக்கம் நிறைந்த பல மூதாட்டிகள், இளைமையுடன் தோற்றுக் கொண்டிருக்கும் மத்திய வயதுப் பெண்கள் என்று பலரும் சுருக்கத்தின் சாயலே தென்படாத அவள் பாதங்களில் வணங்குகிறார்கள். சிலர் மௌனமாகக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவளுடைய பெற்றோரைக் காணவே முடியவில்லை. அவள் சித்தி இன்னமும் அழுது கொண்டிருக்கிறாள். இப்போது அவள் பக்கத்து வீட்டு அத்தை வருகிறாள். அவள் தற்போது வேறு ஊரில் இருக்கிறாள். தாங்க முடியாமல் வீறிட்டு அழுகிறாள். "எங்களை இப்படித் தண்டிக்கலாமா நீ" என்கிறாள். மனிஷா ஒன்றும் சொல்லாமல், புன்னகை பூக்கிறாள். சாந்தமான அம்முகத்தில் வன்மத்தின் சாயல் துளியும் இல்லை.


இவர்கள் பேசும் அதே நேரத்தில், வேறு ஒரு ஊரில், இவர்கள் இருவருக்கும் பரிச்சயமான ஒருவர், தனது வீட்டில் மின்விசிறியின் மேல் ஒரு புடவையைப் போட்டுக் கொண்டிருந்தார்.

(உரையாடல் :சமுக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

13 comments:

  1. Thank you very much for your comment in my blog http://paradiseblossom.blogspot.com for my story 'Valaipoo asai'....

    This story is good!!! Its a good tactic where many things are left to the imagination of the reader :)!

    All the best for you too...

    Cheers,
    Suresh
    ksuresh1984@gmail.com

    ReplyDelete
  2. நல்ல முதிர்ந்த கதையோட்டம் கொடி...
    வாசகனின் யூகங்களுக்கு சுதந்திரம் தரும் மொழி அழகு!
    வாழ்த்துக்களும் அன்பும்!

    ReplyDelete
  3. ராஜாராம் சார்,

    ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    உங்கள் வலை பதிவு படிச்சு அப்படியே பிரமிச்சு போயிட்டேன். சொல்ல வார்த்தை இன்றி நெகிழ்ந்த தருணங்கள் அவை.

    ஒரு விருது கிடைத்த உணர்வுக்கு நன்றி.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  4. Thanks Suresh for the nice comments.

    Anbudan
    Masatra Kodi

    ReplyDelete
  5. நல்ல நடை...வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி நர்சிம். உங்கள் முதல் பின்னூட்டம் means a lot.

    Thanks again.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  7. அருமை !
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
    :)

    ReplyDelete
  8. நன்றி நேசமித்ரன் (என்ன ஒரு இனிய பெயர்). உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  9. குட்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தங்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாததால், இங்கே சொல்லிவிடுகிறேன்.

    சில காரணங்களுக்காக தங்களின் பின்னூட்டத்தை என்னுடைய தேங்காய் சீனிவாசன் பதிவில் இருந்து நீக்கியிருக்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மன்னிக்கவும்

    ReplyDelete
  11. எங்க போனிங்க மேடம்? ஆளயே காணோம்?

    ReplyDelete
  12. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

கொடி வளர (களை எடுத்தாலும் சரி, தண்ணீர் விட்டாலும் சரி - மகிழ்ச்சியே !)